பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்கும் பகவந்த் மானுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

பஞ்சாப் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கும் பகவந்த் மானுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-16 04:20 GMT
சென்னை, 

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று, இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். 

இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார். இந்த நிலையில், பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார். பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் முதல் மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்க உள்ளார்.

இந்த விழாவில் பஞ்சாப் மக்கள் திரளாகப் பங்கேற்கும் படி அவர் அழைப்பு விடுத்திருப்பதால் சுமார் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பஞ்சாப் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்க உள்ள பகவந்த் மானுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பஞ்சாப் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கும் பகவந்த் மான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை இந்திய யூனியனில் மொழிவாரி உரிமைகள், மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்த நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. பஞ்சாபில் புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 


மேலும் செய்திகள்