திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

‘ஆரூரா... தியாகேசா...’ பக்தி கோஷம் விண்ணதிர திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-03-15 23:51 GMT
திருவாரூர்,

சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது திருவாரூர் தியாகராஜர் கோவில். இந்த கோவிலின் சிறப்புக்கு மேலும் மணி மகுடமாக திகழ்வது ஆழித்தேர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்கிற பெருமையை ஆழித்தேர் பெற்று உள்ளது. ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.

திருவாரூர் ஆழித்தேர், இதர கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தேரின் மரப்பகுதி 4 அடுக்குகளை கொண்டது. மரத்தேர் 30 அடி உயரம், விமான கலசம் வரை சீலைகள் அலங்கரிக்கப்படும் நிலை வரை 48 அடியும், விமானம் 12 அடியும், தேர் கலசம் 6 அடியும் என மொத்தம் 96 அடி உயரம் கொண்டது. ஆழித்தேரின் மொத்த எடை 300 டன்னாகும்.

தியாகராஜர் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு தியாகராஜர் அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். அவருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தனித்தனியாக 4 தேர்களில் எழுந்தருளினர்.

ஆழித்தேரோட்டம்

தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக தேரடி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆழித்தேர் சக்கரத்துக்கு தேங்காய் உடைத்து பூஜை நடந்தது. காலை 8.10 மணிக்கு மங்கள இசையுடன் வாணவேடிக்கை முழங்க தேரோட்டம் தொடங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘‘ஆரூரா..., தியாகேசா...’’ என விண்ணதிர பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தேரின் பின்புறம் 2 புல்டோசர்கள் தேர் சக்கரங்களை முன்புறம் தள்ளி விட மெதுவாக சக்கரங்கள் சுழன்று நிலையை விட்டு ஆடி, அசைந்து புறப்பட்டது. கம்பீரமாக காட்சி அளித்த ஆழித்தேர், திருவாரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த காட்சி காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது.

ஆழித்தேரின் பின்புறம் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். திருவாரூர் ஆழித்தேர் அழகை காண உள்ளுர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூருக்கு வந்து இருந்தனர்.

கட்டிடத்தில் உரசியதால் பரபரப்பு

ஆழித்தேர் நேற்று மாலை 5.30 மணி அளவில் வடக்கு வீதியில் வலம்வந்தது. அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் தேரின் அலங்கார கூரை உரசி நின்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கட்டிடத்தில் உரசி தேரின் கூரை சிக்கிய இடத்தில் லேசாக கட்டிடத்தை உடைத்து தேரை பின்புறம் இழுத்து நேர் பாதையில் தேர் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தேரோட்டம் தொடர்ந்து நடந்தது. இதனால் தேரோட்டம் சுமார் அரை மணி நேரம் தடைபட்டது.

மேலும் செய்திகள்