அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-03-15 19:52 GMT
மதுரை,

திருச்சி சுகாதாரத்துறை மண்டல அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றியவர் டி.எஸ்.ராதிகா.

அலுவலகத்தில் இவர், செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும், அப்போது செல்போனை பறிமுதல் செய்த உயர் அதிகாரி மற்றும் காவலரை இவர் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் ராதிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான உத்தரவை ரத்து செய்யக்கோரி ராதிகா, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்த கோர்ட்டு விசாரிக்க முடியாது.

அனுமதிக்கக் கூடாது

அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது சாதாரணமானதாக மாறி வருகிறது. அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்துவது, செல்போனில் வீடியோ பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் நடத்தை மீறல் ஆகும்.

அலுவலகங்களில் ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. அலுவலகத்தில் ஊழியர்கள் நுழையும்போதே செல்போன்களை ஒரு பொதுவான இடத்தில் வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இந்த கோர்ட்டின் கருத்து. அதேபோல அவசர நேரங்களில் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று அலுவலகத்திற்கு வெளியே சென்று செல்போன் பேச அனுமதிக்கலாம்.

இந்த வழக்கை பொறுத்தவரை, அலுவலகங்களில் பணி நேரத்தின்போது செல்போன் பேசுவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

மீறினால் நடவடிக்கை

அந்த உத்தரவு மற்றும் சுற்றறிக்கையை மீறும் அரசு ஊழியர்கள் மீது அரசு ஊழியர்கள் நடத்தை விதி 1973-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் செல்போன் மற்றும் செல்போன் கேமராக்களை பயன்படுத்துவதை வரைமுறைப்படுத்த வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களில் கள அலுவலர்கள், குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு விதி விலக்கு அளிக்கலாம். இந்த உத்தரவை 4 வாரத்தில் நிறைவேற்றி, அதுதொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்