திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமணம் செய்வதாக கூறி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
திருமணம் செய்வதாக கூறி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மாணவி மாயம்
காரைக்கால் திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி வழக்கம்போல் கடந்த 7-ந்தேதி பள்ளிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். மாணவியை யாரேனும் கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
சென்னையில் மாணவி மீட்பு
காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு நித்தின் கவுலால் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து மாணவியை தேடி வந்தனர். மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது அது சென்னையில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை சென்ற தனிப்படை போலீசார் தங்கும் விடுதியில் வாலிபர் ஒருவருடன் தங்கியிருந்த மாணவியை மீட்டு காரைக்கால் அழைத்து வந்தனர்.
வாலிபர் கைது
மாணவியிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த செட்டிமண்டபம் முத்தையா நகரை சேர்ந்த முஷாரப் (வயது 22) என்பவருடன் மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் அவர் அம்பகரத்தூர் வந்து மாணவியிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திகொண்டார். மேலும் மாணவியை திருமணம் செய்வதாக கூறி சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், முஷாரப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.