புதுவை மத்திய சிறையில் ஒருங்கிணைந்த விவசாய பண்ணை தோட்டம் கைதிகளுக்கு ரூ 200 சம்பளம்

காலாப்பட்டு மத்திய சிறையில் ஆடு, மாடுகளுடன் ஒருங்கிணைந்த விவசாய பண்ணை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் கைதிகளுக்கு ரூ.200 சம்பளம் வழங்கப்படுகிறது.;

Update: 2022-03-15 14:00 GMT
புதுச்சேரி
காலாப்பட்டு மத்திய சிறையில் ஆடு, மாடுகளுடன் ஒருங்கிணைந்த விவசாய பண்ணை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் கைதிகளுக்கு ரூ.200 சம்பளம் வழங்கப்படுகிறது.

மத்திய சிறைச்சாலை

புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்காக அரபிந்தோ சொசைட்டி சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. யோகா, நடன பயிற்சி உள்ளிட்ட அளிக்கப்படுகிறது. 
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் அங்கு ஒருங்கிணைந்த பண்ணைத்தோட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 2.6 ஏக்கர் நிலத்தை கைதிகள் மூலம் சமன்படுத்தப்பட்டது. அதில் 60 வகையான பழங்கள், மூலிகை செடிகள் என 50 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. உரம், பூச்சி கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல்களும் வளர்க்கப்படுகிறது. முற்றிலும் சிறை கைதிகளை கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கைதிகளுக்கு ரூ.200 சம்பளம்

இந்த விவசாய பணியில் முதற்கட்டமாக 75 தண்டனை கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினசரி கூலியாக ரூ.200 வழங்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறி, பழங்களை  புதுச்சேரி சந்தையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பண்ணை தோட்டம் தொடங்க விழா நேற்று  முன்தினம் நடந்தது. விழாவில் சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் சிறை சூப்பிரண்டு சக்திவேல், துணை சூப்பிரண்டு பாஸ்கர், அரபிந்தோ சொசைட்டி பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறையில் சிறப்பாக பணியாற்றிய 9 சிறை காவலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்