ஒரு பகுதி பணிகள் நிறைவடைந்தது புதுவை அண்ணாநகர் புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது

புதுவை அண்ணாநகரில் ஒரு பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கியது;

Update: 2022-03-15 13:50 GMT
புதுச்சேரி
புதுவை அண்ணாநகரில் ஒரு பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கியது

பாலம் அமைக்கும் பணி

புதுவை இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் மழைக்காலங்களில் மழைவெள்ளம் தேங்குவதை தடுக்க அண்ணா நகர் பகுதியில் சாலையின் குறுக்கே உள்ள குறுகிய கழிவுநீர் வாய்க்கால் பாலத்தை பெரிதாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அங்கு செயற்கையாக பாலம் அமைக்கும் பணி கடந்த 9-ந்தேதி இரவு தொடங்கியது. இந்த பணிகளை கடந்த 13-ந்தேதியே முடிக்க திட்டமிடப்பட்டது. 
இதற்காக போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டது. இந்திராகாந்தி சிலை பகுதியிலிருந்து பஸ் நிலையத்துக்கு வரும் வாகனங்களும், பஸ் நிலையத்திலிருந்து இந்திராகாந்தி சிலை நோக்கி செல்லும் வாகனங்களும் மரப்பாலம் வழியாக இயக்கப்பட்டன.

ஒரு பகுதியில் பணிகள் நிறைவு

இதன் காரணமாக மரப்பாலம், முதலியார்பேட்டை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்தை அடைந்தனர். பாலம் அமைக்கும் பணியும் திட்டமிட்டபடி கடந்த 13-ந்தேதிக்குள் முடியவில்லை. இதனால் நாள்தோறும் வாகன நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இந்தநிலையில் இரவு, பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு பகுதி பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. அதாவது பஸ் நிலையத்திலிருந்து இந்திராகாந்தி சிலை நோக்கி செல்லும் வழியில் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

போக்குவரத்து தொடங்கியது

அந்த பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாவிட்டாலும் பொதுமக்களின் நலன் கருதி காலை முதல் அந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன் காரணமாக மரப்பாலம் வழியாக செல்லாமல் வாகனங்கள் அண்ணாநகர் பாலம் வழியாக இயக்கப்பட்டன.
இதனால் மரப்பாலம் பகுதியில்  ஓரளவு நெருக்கடி குறைந்துள்ளது. இருந்தபோதிலும் பஸ்நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மரப்பாலம் வழியாக செல்கின்றன.

2 சக்கர வாகனங்கள்

இந்திராகாந்தி சிலையில் இருந்து பஸ்நிலையம் நோக்கி செல்லும் பாதையில் தொடர்ந்து பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் முடிவடைய ஓரிரு நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
இருந்தபோதிலும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோரின் நலன் கருதி தற்போது பணி முடிந்துள்ள பகுதி வழியாக ஆட்டோ, கார் மற்றும் 2 சக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்க முடியுமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்