பொருளாதார திறனில் தமிழக பெண்கள் முன்னிலை - தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தகவல்

நாட்டிலேயே பொருளாதார திறனில் தமிழக பெண்கள் முன்னிலை வகிப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-03-15 13:25 GMT
புதுடெல்லி,

‘நாட்டில் பொருளாதார ரீதியாக பெண்கள் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனரா?’ என்பது தொடர்பான 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதில் பெண்களின் பொருளாதார திறனில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 92% பெண்கள் சுயமாக வங்கிக் கணக்கை நிர்வகித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புறங்களில் 93% பெண்களும், கிராமப்புறங்களில் 92% பெண்களும் வங்கிக்கணக்கை நிர்வகித்து வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக 4-ல் ஒருவர் மொபைல் போன் மூலம் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் நகர்ப்புறங்களில் 32% பெண்களும், கிராமப்புறங்களில் 21% பெண்களும் மொபைல் போன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இருப்பினும் நுண்கடன் திட்டங்களை பயன்படுத்துவது மிகக்குறைவாக இருப்பதாகவும், 74% பெண்கள் மட்டுமே நுண்கடன் திட்டங்கள் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும், அதில் 18% பெண்கள் மட்டுமே கடன் பெற்று பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும், நகர்ப்புறங்களில் 93% பெண்களும், கிராமப்புறங்களில் 96% பெண்களும் வங்கிக்கணக்கை நிர்வகித்து வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 89%, கோவாவில் 88%, ஒடிசா மற்றும் சண்டிகரில் தலா 87%, ஜம்மு காஷ்மீரில் 85%, இமாச்சல பிரதேசத்தில் 83% பெண்கள் சுயமாக வங்கிக்கணக்கு வைத்துள்ளதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்