காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ரூ.5 கோடியில் தங்க கவசம்..!

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.5 கோடியில் தங்க கவசம் வழங்கினார்.;

Update: 2022-03-15 01:45 GMT
காஞ்சிபுரம், 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.5 கோடி மதிப்பில் கீரீடம் முதல் பாதம் வரை வைரம் வைடூரியம் மரகத கற்கள் பதித்த தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார். இந்த தங்க கவசம் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 

இந்த ஊர்வலம் சங்கர மடத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. பின்னர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மனுக்கு தங்க கவசத்தை அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் செய்தார். இந்த ஊர்வலத்திலும், தங்க கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் ஐதராபாத்தைச் சேர்ந்த உபயதாரர், அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த கிரி உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த வாரம் முழுவதும் தங்க கவசம் பக்தர்கள் பார்வைக்காக அம்மனுக்கு சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்