மழலையர் வகுப்புகள் மீண்டும் திறப்பு
புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.;
புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
மழலையர் பள்ளிகள்
புதுவையில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின் கொரோனாவின் 3 அலைகளின்போதும் தொற்று பாதிப்பு குறையும்போதும் பள்ளி, கல்லூரிகள் அவ்வப்போது திறந்து மூடப்பட்டன.
ஆனால் மழலையர் பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்) 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த மாதமே மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதிகாரப்பூர்வமாக திறப்பு
ஆனால் புதுச்சேரியில் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்டன. வகுப்புகளுக்கு வண்ண உடையுடன் குழந்தைகள் சென்று வந்தனர்.
இந்தநிலையில் மழலையர் பள்ளிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
இனிப்புகள்
ஒருசில குழந்தைகள் அடம்பிடித்து அழுதபோதிலும் அவர்களை ஆசிரியர்கள் பக்குவமாக கையாண்டனர். குழந்தைகளுக்கு சாக்லெட் உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினர். வீட்டு சூழ்நிலையில் இருந்து பள்ளிக்கு வந்ததால் மாணவர்கள் புதிய அனுபவத்தை கற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் இன்முகத்துடன், பாட்டுப்பாடி, விளையாட்டு காட்டி வகுப்புகளை நடத்தினர்.
அதிகாரி மகன்
இந்த நிலையில் புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, தனது மகனான அசுதோசுக்கு 3 வயது முடிந்துள்ள நிலையில் லாஸ்பேட்டை புதுப்பேட்டையில் உள்ள கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்தார்.
இதுகுறித்து ருத்ரகவுடு கூறுகையில், அரசுப்பள்ளிகள் எந்த விதத்திலும் தரம் தாழ்ந்தது இல்லை. நன்கு பயிற்சி பெற்ற, திறமைவாய்ந்த ஆசிரியர்கள்தான் இங்கு பணியில் உள்ளனர். எனவே நான் எனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளேன் என்றார்.