சென்னை: திமுக பிரமுகர் கொலை வழக்கு - கூலிப்படை தலைவன் கைது....!
சென்னையில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி 188-வது தி.மு.க. வட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ம் தேதி மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள கட்சி அலுவலகம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் உதவி கமிஷனர்கள் பிராங் டி ரூபன், அமீர் அகமது உள்பட போலீசார்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கூலிப்படையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் முருகேசன் என்பவரை அம்பத்தூர் பகுதியில் போலீசார் துப்பாக்கி முனையில் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முருகேசனை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.