காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை....!
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
திருப்பனந்தாள்,
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சோழபுரம் சின்ன அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மாலியா என்கிற சோனாலி (வயது23). கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்
மாலியா அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சக்திதாஸ் என்பவரை கடந்த 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது சக்திதாஸ் சோழபுரத்தில் குடிதண்ணீர் வினியோகம் செய்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனைவி மாலியா தனது தாய் வீட்டில் வசித்து வந்து உள்ளார்.
தாய் வீட்டில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாலியாவுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர். இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாலியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாலியா தூக்கில் தொங்கி நிலையில் கிடந்ததை கண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
பின்னர் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சோழபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். சம்பவ இடத்துக்குவந்த போலீசார் மாலியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.