கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. நகர நிர்வாகி இல்ல விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “திமுக மீது மக்கள் வைத்த நம்பிக்கையே சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு காரணம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு- மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதே மக்களுக்காக செயல்பட்ட இயக்கம் திமுக. கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி 124 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று 95 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.