மின்கம்பம் மீது மோதிய கார்; மின்சாரம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..!

ஆம்பூர் அருகே மின் கம்பம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் கரெண்ட் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.

Update: 2022-03-14 04:00 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த திலகராஜ் (எ) எட்வின் வயது (36). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஆலயங்காயம் அருகே உள்ள மாமியார் வீட்டிற்கு காரில் வந்துள்ளார்.

பின்னர் மீண்டும் தனது சொந்த ஊரான ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பத்திற்கு சென்றார். பாபனப்பள்ளி ஊராட்சி அலுவலகம் அருகே வந்தபோது திலகராஜுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் துண்டாக உடைந்து காரின் மீது விழுந்தது.

இப்பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டு இருந்தால் தம்பதி மற்றும் இரு குழந்தைகள் உட்பட காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்ட சில மணி நேரத்தில் மின்சாரம் வழங்கியதால் மற்றொரு மின் கம்பத்தில் மின்கம்பி பட்டத்தில் தீப்பொறி ஏற்பட்டு அருகில் இருந்த செடிகள் பற்றி மளமளவென எரிந்தது. இதனால் சாலையில் செல்வோர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பதற்றமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் மின்சாரத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மின் துறையினர் மீண்டும் அப்பகுதியில் மின் துண்டிப்பு செய்து விபத்தினால் மின்கம்பங்களில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்தனர். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்