உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: பிரதமர் நரேந்திரமோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டதற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-13 21:55 GMT
சென்னை,

உங்களது துடிப்பான தலைமையிலான இந்திய அரசின் ‘ஆபரேஷன் கங்கா’ மூலம் உக்ரைனில் போர் முனையில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்கள் மட்டுமன்றி பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தின் குடிமக்களும் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக பதற்றம் நிறைந்த சுமி நகரில் பதுங்கியிருந்த இந்திய மாணவர்கள் அனைவருமே ரஷியா, உக்ரைன் நாடுகளின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த நடவடிக்கை தங்களின் ராஜதந்திரம் மற்றும் வெளிநாடுகளுடன் பேணும் நல்லுறவின் உச்சத்தை வெளிக்காட்டி இருக்கிறது. உக்ரைனில் தவித்த இந்தியர்களை மீட்டதற்காக அ.தி.மு.க. சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் மனதார நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமருக்கு பாராட்டு

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உக்ரைனில் போர் நடைபெற்று வந்த நேரத்தில் அங்கிருந்த இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக பயனளித்தது. குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது பாராட்டுக்குரியது. அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருந்தது. இதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் இந்திய தூதரகம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்தியதற்கு த.மா.கா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்