தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு...!
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா.
இந்த தம்பதிகளுக்கு கனிஷ்கா, ஹனீஸ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஹனீஸ் (வயது2) வீட்டுக்கு வெளியே திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்து உள்ளார். அப்போது யாரும் கவனிக்காத நிலையில் திண்ணையை ஒட்டி உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து உள்ளது. குழந்தை வெகு நேரமாக தொட்டிக்குள் கிடந்ததை யாரும் பார்க்கவில்லை.
பின்னர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை செல்லும் வழியிலேயே உயிரிழந்து உள்ளது.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.