நெல்லை: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நெல்லை கொட்டி போராட்டம்..!
நெல்லையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால், விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே படப்பக்குறிச்சி, பொட்டல், திருவண்நாதபுரம், கோட்டூர், பெரியபாளையம், திம்மராஜபுரம் பகுதியில் தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல் அறுவடை செய்து ஆண்டுதோறும் படப்பக்குறிச்சி பகுதியில் அமைக்கப்படும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இந்த ஆண்டு அங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் இன்று நெல் மூடைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் நெல்லைக் கொட்டி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.