கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பாடத்திட்டங்களில் பிற்போக்கு கருத்துகள் புகுத்தப்படுவது கவலைக்குரியது. இதற்கு கல்வி முழுவதும் மாநில பட்டியலுக்கு மாற்றுவதுதான் சிறந்த தீர்வாக அமையும் என்று தென்மாநில துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update: 2022-03-11 18:54 GMT
சென்னை,

பாரதியார் பல்கலைக்கழகம், அனைத்து இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு ஏற்பாட்டில் தென்மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.

கவர்னர் தொடங்கி வைத்தார்

இந்த மாநாட்டுக்கு அனைத்து இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் தலைவரான துணைவேந்தர் திருவாசகம் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பங்கஜ் மிட்டல் முன்னிலை வகித்தார்.

இந்த மாநாட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.காளிராஜ் வரவேற்று பேசினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் மாநாட்டில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2020-21-ம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டின் 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 33 கல்லூரிகள் முதல் 100 இடங்களுக்குள் உள்ளன. சென்னையில் உள்ள லயோலா கல்லூரி அனைத்து இந்திய அளவில் 3-வது இடமும் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கின்றது.

பள்ளிக்கல்வி முடித்து, உயர்கல்விக்கு படிக்க வரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 சதவீதம். ஆனால், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதம் என்ற அளவுக்கு மிக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவிலான சராசரியை விட 2 மடங்கு அதிகம் என்பது உயர்கல்வியில் தமிழ்நாடு நிகழ்த்தியுள்ள சாதனை. அது மட்டுமல்ல, 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது.

முன்னோடி மாநிலம்

தமிழ்நாட்டில் 1,553 கல்லூரிகள், 52 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், 1,096 தொழிற்கல்வி நிறுவனங்கள் உயர்கல்வி அளித்து தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கின்றன. தொழிற்கல்வியிலும், மருத்துவ கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்து, சாதாரண நிலையில் உள்ளவர்களும் சிறந்த நிலைக்கு உயர வழிவகுத்து கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

அதோடு, தொழிற்கல்வி மற்றும் மருத்துவ படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை ஒழித்துக்கட்டி, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் அளவில் மேற்படிப்பில் இடம் கிடைக்க செய்தவர் கருணாநிதி. பெண் கல்வியிலும் சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

முக்கிய குறிக்கோள்

நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்வேறு திட்டங்களை, அறிவிப்புகளை 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டிருந்தோம். மாநிலத்தில் உயர்கல்வி சென்றடையாத பகுதிகளுக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் அரசால் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதிகளவிலான நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவின் தரநிலையை அடைவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தாய்மொழி கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு, தொடக்கத்தில் 4 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலை வகுப்புகள் தமிழில் நடப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தொழிற்கல்வியில் உள்ள பாடநூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்ய ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் பட்டதாரிகளை உருவாக்குவதும், முனைவர் பட்டங்களை வழங்குவதும், தேசிய மற்றும் உலகளவில் தரவரிசை பெறுவதுமாகவும் பணியாற்றி வருகின்றன. ஆனாலும் கூட, இந்திய உயர்கல்வியின் முக்கியமான குறிக்கோளான அனைவருக்கும் வேலை தரும் கல்வி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை உங்களுக்கு இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சிறந்த தீர்வு

கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை வைத்து, மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிற்போக்கு கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவலைக்குரியதாக உள்ளது. கல்வி முழுமையாக மாநில பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.

மாநிலத்தில் உள்ள கல்வி கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். இந்த மாபெரும் மாநாடு தன் நோக்கங்களில் வெற்றி பெறவும், அதன் மூலம் நமது நாட்டின் உயர்கல்வி மேன்மை பெறவும் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்