மண்பாண்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
மழைக்கால நிவாரணம் கேட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைநிவாரணம் வழங்கவேண்டும். தனி நல வாரியம் அமைக்கவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மண்பாண்டம், சுடுமண் சிற்பம் செய்ய கற்றுத்தர ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். வங்கிக்கடனை தள்ளுபடி செய்யவேண்டும். மின்னணு எந்திர சக்கரத்தை இலவசமாக வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுச்சேரி குலாலர்கள் மண்பாண்டம் செய்வோர் நலவாழ்வு இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
தர்ணாவில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்களை தங்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். மேலும் அங்கேயே மண்பாண்டங்களையும் செய்தனர். இந்த போராட்டத்தில் மாநில அமைப்பாளர் முருகன், பொதுச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.