வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 14 மாவட்டங்களில் நாளை மறுதினம் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 14 மாவட்டங்களில் நாளை மறுதினம் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

Update: 2022-03-09 22:52 GMT
சென்னை,

தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்த பிறகு, வளிமண்டல சுழற்சி, காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை மறுதினமும் (சனிக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (13-ந்தேதி) சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி, நாளை மறுதினம் தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், காயல்பட்டினத்தில் 7 செ.மீ., திருச்செந்தூரில் 2 செ.மீ., சாத்தான்குளத்தில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்