ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில்... நோயாளிகளை குறிவைத்து கைவரிசை காட்டிய பெண் கைது
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ‘ஸ்கேன்’ எடுக்க வரும் நோயாளிகளை குறிவைத்து கைவரிசை காட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் விமலா (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது அவரை டாக்டர்கள் ‘சி.டி.ஸ்கேன்’ எடுக்க அறிவுறுத்தினர். ‘ஸ்கேன்’ எடுக்கும் அறையில் அறிமுகமான ஒரு பெண்ணிடம் விமலா, தனது நகையை கழற்றி கொடுத்தார். ‘ஸ்கேன்’ எடுத்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, நகையுடன் அந்த பெண் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆஸ்பத்திரி போலீசில் அவர் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா உதவிடன் அந்த பெண்ணை தேடி வந்தனர். இந்தநிலையில், விமலாவிடம் நகையை பறித்து சென்ற பெண், கீழ்ப்பாக்கம் ஓசான் குளத்தை சேர்ந்த சாந்தி (53) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளை குறிவைத்து, அவர்களின் பணம், நகைகளை திருடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அவர், இதுபோல், பல ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் கைவரிசை காட்டி இருப்பதும், அவர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.