சூர்யா பொதுமன்னிப்பு கேட்காத வரை 'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிடக்கூடாது: பாமக கோரிக்கை
சூர்யா நடிப்பில் வெளிவரும் எதற்கும் துணிந்தவன் படத்தினை திரை அரங்குகளில் அனுமதிக்கக் கூடாது பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கரூர்,
நடிகர் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் கரூர் மாநகரில் மட்டும் அஜந்தா உள்ளிட்ட 3 திரையரங்குகளில் நாளை (மார்ச் 10ம் தேதி) வெளியாக உள்ளது. இந்த நிலையில் கரூர் அஜந்தா திரையரங்க மேலாளர் பழனிச்சாமியிடம், கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் நா.பிரேம்நாத் தலைமையில் மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கி முருகேசன் ,வன்னியர் சங்க பசுபதி கரூர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் இன்று (மார்ச் 9ம் தேதி) மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த நவம்பர் மாதம் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல் காட்டியுள்ளனர்.
சகோதரத்துவமாக உள்ள இருளர் வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் வன்முறை யாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை 10-ம் தேதி வெளியாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தினை கரூர் மாவட்ட திரை அரங்குகளில் வெளியிட அனுமதிக்க கூடாது என கூறப்பட்டு உள்ளது.