நெல்லை: சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் - சாப்டர் பள்ளி மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று திறப்பு..!

சுவர் இடிந்து 3 பேர் பலியான நெல்லை சாப்டர் பள்ளி மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது.

Update: 2022-03-09 07:30 GMT
நெல்லை,

நெல்லையில் உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். 4 மாணவர்கள் காயமடைந்தனர்.

3 மாதமாக திறக்கவில்லை

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக அந்தப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அஜாக்கிரதையாக செயல்பட்டதாக அந்த பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் கழிவறையில் புதிதாக சுவர் கட்டவும், பள்ளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனால் கடந்த 3 மாதங்களாக சாப்டர் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை. அதில் படித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வந்தனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் கடந்த 3 மாதமாக சம்பளமும் வழங்கப்படவில்லை.

அனுமதி

இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் அனைத்து பராமரிப்பு வேலைகளும் முடிந்து பள்ளிக்கூடம் திறக்க அனுமதி கேட்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவும் கோரிக்கை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சாப்டர் பள்ளியை ஆய்வு செய்து திறக்க அனுமதி அளித்தனர் .

இன்று திறப்பு

இதன் பேரில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று சாப்டர் பள்ளி திறக்கப்பட்டது. முதலில் இன்று 6, 8 ,10 ,12 ஆகிய 4 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தப்படும் என்றும், நாளை 7, 9 ,11 ஆகிய வகுப்புகளையும் சேர்த்து அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பள்ளிக்கூடத்தில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலையில் குறைந்த அளவு மாணவர்கள் பள்ளிக்கு வந்து இருந்தனர். சாப்டர் பள்ளியில் மொத்தம் 2700 மாணவர்கள் படித்து வந்தனர். இதில் 6, 8 ,10, 12 ஆகிய வகுப்புகளில் மட்டும் 1300 மாணவர்கள் படித்தனர். இதில் காலை 10 மணியளவில் சுமார் 1000 மாணவர்கள் வரையே வகுப்புக்கு வந்திருந்தனர்.

இன்று பிற்பகல் 1300 மாணவர்கள் வகுப்புக்கு வர உள்ளனர் என்றும், நாளை 2700 மாணவர்களும் வழக்கம்போல் கலந்துகொண்டு பள்ளிக்கூடம் வழக்கம்போல் செயல்படும் என்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்