குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
குருவாயூர் எக்ஸ்பிரசில் 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் பெட்டிகள் கூடுதலாக நாளை(வியாழக்கிழமை) முதல் இணைக்கப்படுகிறது.
மதுரை,
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து மதுரை வழியாக, சென்னைக்கு தினசரி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் குருவாயூரில் இருந்து தினமும் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 8.30 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 6.40 மணிக்கு குருவாயூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மேலும், இந்த ரெயில் தூத்துக்குடி-சென்னை இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டது.
ஆனால், 2020-ம் ஆண்டு புதிய ரெயில்வே கொள்கையின் படி, இணைப்பு ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தூத்துக்குடி-சென்னை குருவாயூர் இணைப்பு ரெயிலும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவில்லை. இதற்கிடையே, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, இந்த ரெயிலில் இரு மார்க்கங்களிலும் 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
அதாவது, சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூருக்கு இயக்கப்படும் ரெயிலில் (வ.எண்.16127) நாளை (வியாழக்கிழமை) முதலும், குருவாயூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரெயிலில் (வ.எண்.16128) வருகிற 11-ந் தேதி முதலும் இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
அதனை தொடர்ந்து, இந்த ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் இருக்கை வசதி மற்றும் பார்சல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.