திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும் ரூ. 20 கட்டணம் தரிசனம் முறை ரத்து செய்யப்படுகிறது.

Update: 2022-03-08 17:41 GMT
கோப்புப்படம்
திருச்செந்தூர், 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய 250 ரூபாய், 100 ரூபாய், 20 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருச்செந்தூர் திருக்கோவிலில் நாளை முதல் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும் ரூ. 20 கட்டணம் தரிசனம் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை கூறுகையில், “திருச்செந்தூர் திருக்கோவிலில் ஐகோர்ட்டின் உத்தரவுபடி, இந்துசமய ஆணையர் சில நிபந்தனைகைளை உத்தரவாக பிறப்பித்தார்கள். இதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரூ.250 கட்டணமும், ரூ.20 கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. 

ரூ.100 கட்டணம் மற்றும் பொதுதரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும். இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோவிலில் திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பல நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

அடையாள அட்டை வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு உதவும் வகையில் இருக்கும். அதே போல் கோவில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதபடை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 60 பேர் ஈடுபட உள்ளனர். ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது. விஐபி தரிசனத்திற்கு தனிநேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. கோவிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்து . கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை நாளை (9ம் தேதி) முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்