ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்துகளை தெரிவித்தனர்.
இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் விசாரணைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்ப்பு அப்போலோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மேலும், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவு 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. இதன் காரணமாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மார்ச் 21-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் மார்ச் 21-ம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ள ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ்க்க்கு சம்மன் அனுப்பி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.