தூத்துக்குடியில் நடந்த விழாவில் ரூ.4,755 கோடியில் புதிய தொழில்கள் தொடங்க 33 புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடியில் நடந்த விழாவில் ரூ.4,755 கோடி முதலீட்டில் புதிய தொழில்கள் தொடங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Update: 2022-03-07 23:47 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நேற்று அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது அந்த பூங்காவில் தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் ரூ.2 ஆயிரத்து 845 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதுதவிர தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1,910 கோடி முதலீட்டில் புதிய தொழில்கள் தொடங்க 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதலீடு

தொழில் துறை சார்பில் ரூ.1,643 கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரத்து 653 பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த நிறுவனங்கள் தூத்துக்குடி, நெல்லை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி, உரங்கள், ரசாயனங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் முதலீடு செய்கின்றன.

சிறு, குறு நிறுவனங்கள்

இதே போன்று குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை சார்பில் ரூ.267 கோடி முதலீடு மற்றும் 2 ஆயிரத்து 373 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த நிறுவனங்கள் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கட்டுமானம், உணவு பதப்படுத்துதல், கண்ணாடி உற்பத்தி, ஆடைகள் மற்றும் ஜவுளி, சூரிய ஒளி அடுப்புகள், அறைகலன், உரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகிய துறைகளில் முதலீடு செய்கின்றன.

இதன் மூலம் நேற்று நடந்த விழாவில் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 755 கோடி முதலீடும், 17 ஆயிரத்து 476 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 33 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் செய்திகள்