உக்ரைன் எல்லையை கடக்க ஏற்பட்ட சிரமங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
உக்ரைன் எல்லையை கடக்க ஏற்பட்ட சிரமங்கள் குறித்து மாணவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
நெல்லை,
உக்ரைன் மீது ரஷியா போர்த்தொடுத்து வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியா மாணவர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் தாயகம் திரும்பினர்.
இதனிடையே உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்க எம்.பிக்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை உக்ரைனில் இருந்து டெல்லி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை அந்த குழு சந்தித்தது. இதனிடையே தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள், கல்வியை தொடர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தநிலையில், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து முடித்து, மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனில் அவர்களது அனுபவம் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.