மூன்றாவது மனைவி தாய் வீட்டுக்குக் கோபித்துச் சென்றதால் அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை..!
புதுக்கோட்டை அருகே மூன்றாவது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றதால் விரக்தியில் அரசு பஸ் கண்டக்டர் கழுத்தில் கயிற்றை இறுக்கி தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த குளத்தூர் பசுமை நகரில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (38). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரு முறை திருமணம் நடந்து குழந்தைகள் இல்லாததால் விவாகரத்து பெற்றார். பின்னர் மூன்றாவதாக லதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் லதா கோபித்துக்கொண்டு 2 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதனால் தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மதியம் வீட்டை விட்டு வெகுநேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கட்டிலில் படுத்த நிலையில் கழுத்தில் கயிற்றால் சுருக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீசார் விசாரணையில், கட்டிலின் ஒரு பகுதியில் கயிற்றைக் கட்டி மறுமுனையைத் தனது கழுத்தில் சுருக்கு மாட்டி தனக்குத் தானே இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வருவதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.