கள்ளக்குறிச்சி அருகே தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..!
கள்ளக்குறிச்சி அருகே அங்காள அம்மன் கோவில் திருவிழாவின் போது தேர் நிலைதடுமாறி விழுந்ததில் விபத்துகுள்ளானது.
கள்ளக்குறிச்சி ,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டையில் அமைந்துள்ள அங்காள அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டிற்கான திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று காலையில் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக எலவனாசூர்கோட்டை கள்ளக்குறிச்சி சாலையில் நிலைதடுமாறி தேர் சாலையில் கவிழ்ந்தது. இதில் கோவில் பூசாரி ஒருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் 2 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலையில் கவிழ்ந்த தேரை மீட்டு நிலை நிறுத்தினார்கள். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மா அம்மா என முழுங்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.