தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இது இன்று மேலும் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-06 23:18 GMT
சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது நேற்று காலையில் மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக, இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8-ந் தேதி (நாளை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல 9, 10-ந் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இன்று முதல் 10-ந் தேதி வரையிலான 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மிதமான மழை

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு இன்று காலை வரையிலும் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்