அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ 2 லட்சம் பொருட்கள் கொள்ளை

மரக்காணம் அருகே அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். லாக்கரை திறக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியது.;

Update: 2022-03-06 18:23 GMT
மரக்காணம் அருகே அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். லாக்கரை திறக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியது.
சுவரை உடைத்து கொள்ளை
புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாராம் (வயது 51). இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்துள்ள  கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் நகை அடகு கடை வைத்துள்ளார். 
நேற்று இரவு 7 மணியளவில் கடையை மூடிவிட்டு சாந்தாராம் வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை வழக்கம்போல் வந்து கடையை திறந்தார். அப்போது கடையின் பின்பக்க சுவர் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மரக்காணம் போலீசார் விரைந்து வந்து அடகு கடையை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். 
நகைகள் தப்பியது
நள்ளிரவில் மர்மநபர்கள் அடகு கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு லாக்கரை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
கிடைத்த வரைக்கும் லாபம் என்ற வகையில் கடையின் கல்லாவில் வைத்திருந்த 10 ஆயிரம் ரொக்கம், டி.வி, பிரிண்டர், கண்காணிப்பு கேமரா ஆகியவை மர்மநபர்களால் கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மர்மநபர்களால் லாக்கரை உடைக்க முடியாததால் அதில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பியது.
துணிகர சம்பவம்
இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்