சென்னை புத்தக கண்காட்சி: ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி என்ற சிறப்பை பெற்ற சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Update: 2022-03-06 12:39 GMT
சென்னை, 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பிப்ரவரி 16-ம் தேதி புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த 18 நாட்களாக தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற்றது. 800 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்த கண்காட்சிக்கு தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட புத்தக வாசிப்பில் ஆர்வம் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர். 

இந்த நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி என்ற சிறப்பை பெற்ற சென்னை புத்தக கண்காட்சி (பிப்ரவரி 6-ம் தேதி) இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை, 15 லட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்து சென்றுள்ளதாகவும், சுமார் 15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் விற்பனை ஆகியுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து இன்று மாலை புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நடைபெறுகிறது. அதில், 25 ஆண்டுகள் பதிப்பகத் துறையில் பணியாற்றியவர்களுக்கும், சென்னை புத்தக கண்காட்சி நடைபெற உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்