டிராக்டரை தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை

கடனை திருப்பி செலுத்தாததால் நிதிநிறுவன ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-06 06:54 GMT
மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள தேவனூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன்கள் சுரேஷ் (வயது 32), பாஸ்கரன் (32), சின்னதுரை (23). இவர்கள் 3 பேரும் விவசாயிகள். விவசாய பணிக்காக சுரேஷ் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கடன் பெற்று 2 டிராக்டர் வாங்கினார். அதை அண்ணன்-தம்பிகள் 3 பேரும் பயன்படுத்தி கடனை அடைத்து வந்தனர். இதில் ஒரு டிராக்டருக்கான கடனை அவர்கள் திருப்பி செலுத்தியுள்ளனர்.

ஆனால் மற்றொரு டிராக்டருக்கு கடன் தொகை ரூ.2 லட்சம் பாக்கி இருந்ததாக தெரிகிறது.அதை உடனே கட்டுமாறு நிதிநிறுவன ஊழியர்கள் சுரேசிடம் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் சுரேஷ் பணம் கட்டமுடியாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தேவனூர் கிராமத்துக்கு வந்த நிதிநிறுவன ஊழியர்கள், அண்ணன்- தம்பிகள் 3 பேரையும் ஆபாசமாக திட்டியதுடன், கடன் தொகை கட்டவில்லை என கூறி ஒரு டிராக்டரை பறிமுதல் செய்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையும், அவமானமும் அடைந்த சின்னதுரை நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நிதிநிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சின்னதுரையின் உடலை சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த தாசில்தார் கோவர்த்தனன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், கோரிக்கை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்