இலஞ்சி கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

இலஞ்சி குமாரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2022-03-06 01:48 GMT
நெல்லை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலையில் 2-வது நாளாக அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து நெல்லை வழியாக தென்காசி மாவட்டம் இலஞ்சிக்கு புறப்பட்டு சென்றார். வழியில் அவருக்கு நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கொக்கிரகுளத்தில் தாரை-தப்பட்டை முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சசிகலா, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஒரு தம்பதியின் குழந்தைக்கு ‘ஜேம்ஸ்’ என்று பெயர் சூட்டினார்.

அப்போது அவருக்கு அ.ம.மு.க. பகுதி செயலாளர் பேச்சிமுத்து பாண்டியன் வெற்றிவேல் வழங்கினார்.

தொடர்ந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம் சென்ற சசிகலாவுக்கு ஆங்காங்கே தொண்டர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பாவூர்சத்திரத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் தென்காசி அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலுக்கு மதியம் 1.30 மணிக்கு வந்தார். அங்கு அவருக்கு பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுமார் ½ மணி நேரம் வரை அவர் அங்கு இருந்தார்.

பின்னர் கோவிலுக்கு அருகே உள்ள அகத்தியர் பாத பீடத்தில் அவர் கற்பூரம் காட்டி பூஜை செய்தார். தொடர்ந்து அதன் முன் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். அப்போது இளவரசி மகன் விவேக் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்