தமிழகத்தில் அனேக இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அனேக இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-06 01:20 GMT
சென்னை,

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நேற்று முன்தினம்) மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (நேற்று) காலை அதே பகுதியில், வடதமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக 6-ந்தேதி (இன்று) கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

7-ந்தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்