காஞ்சிபுரம்: தாயிடம் தகராறு செய்த தம்பியை வெட்டி கொன்ற அண்ணன்

வாலாஜாபாத் அருகே தாயிடம் தகராறு செய்த தம்பியை கோபத்தில் வெட்டி கொலை செய்த அண்ணனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-03-05 21:15 GMT
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட களியனூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி- முகிலா தம்பதியினர்.இவர்களுக்கு லிங்கேஸ்வரன் (20), வேதபிரகாஷ் (18) என இரு மகன்கள் உள்ளனர்.

லிங்கேஸ்வரன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தம்பி வேதபிரகாஷ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த நிலையில் கூடாத நட்பு ஏற்பட்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகி தகாத செயல்களில் ஈடுபட்டு, கொலை வழக்கிலும் சிக்கியுள்ளார்.

வேதபிரகாஷ் அடிக்கடி குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தொல்லை செய்து நாள்தோறும் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தாய் முகிலாவிடம் தகராறு செய்த நிலையில் கல்லூரியில் இருந்து வந்த அண்ணன் லிங்கேஸ்வரன் தம்பியை தட்டி கேட்டுள்ளார்.

இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் தம்பி வேதபிரகாஷ் தனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன லிங்கேஸ்வரன் கோபம் அடைந்து, மதுபோதையில் வீட்டின் அறையில் படுத்திருந்த தனது தம்பியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வேதபிரகாஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேதபிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார்  இது குறித்து வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவன் லிங்கேஸ்வரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்