மேகதாது விவகாரம்: கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது; அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
கர்நாடகாவில் கடந்த 2013-ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 66 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைக்க வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்காமல் உள்ளது. மேகதாது திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்தியது.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று கூடியது. பகல் 12.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை (வரவு-செலவு திட்ட அறிக்கை) தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேகதாது திட்டத்திற்கு பட்ஜெட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி அறிவித்துள்ளார். மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமல் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும். மேகதாது அணை வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.