காகிதமில்லா அலுவலகம் - தமிழக அளவில் கோவை மாவட்ட போலீசார் முதலிடம்
காகிதமில்லா அலுவலக திட்டத்தில் தமிழக அளவில் கோவை மாவட்ட போலீசார் முதலிடம் பிடித்துள்ளனர்.;
கோவை,
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிகளவு உள்ளது. இதற்காகவே ஒரு தொகை செலவிட வேண்டியது உள்ளது. இந்த செலவைக் குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்தி வருகின்றன. போலீசாரின் அலுவலக பயன்பாட்டிற்கான கோப்புகள் அனைத்தையும் கணினி மூலம் அனுப்ப இ-ஆபிஸ் எனும் தனி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் துறைகளுக்கு அரசு சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த திட்டத்தை மூலம் கடந்த பிப்ரவரி மாதம் அலுவலக கோப்புகளை இ-ஆபிஸ் மூலம் அனுப்பிவைத்து மாநில அளவில் கோவை மாவட்ட போலீசார் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதற்காக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமாருக்கு இ-மெயிலில் பாராட்டு சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவின்பேரில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் விருது பெற காரணமாக இருந்த பணியாளர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.