அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம்
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் நடந்தது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்தாமரைகுளம்:
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் நடந்தது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரமாண்ட ஊர்வலம்
அய்யா வைகுண்டசாமியின் 190-வது அவதாரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அய்யா வழி பக்தர்களின் பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. இதற்காக திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட அவதார தினபேரணி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைந்தது.
தொடர்ந்து நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் அய்யா வழி பக்தர்களின் சமய மாநாடு நடந்தது. இதில் அய்யா வழி பிரமுகர்கள் பங்கேற்று பேசினர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அய்யா வழி பக்தர்கள் வந்திருந்தனர். ஊர்வலத்தை அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவன தலைவர் பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார். வக்கீல் ஜனா.யுகேந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள். அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக் கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக் குடம் சுமந்து சென்றனர்.
ஊர்வலத்திற்கு வரவேற்பு
ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ஊர்வலம் கோட்டார் வழியாக இடலாக்குடி பகுதிக்கு வந்தது. அங்கும் மாற்று மதத்தினர் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஊர்வலம் சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு வந்தடைந்தது. சாமிதோப்பில் முக்கிய பகுதியான முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் தலைமைப்பதியின் ரத வீதியையும் தலைமைப்பதியையும் சுற்றிவந்து நண்பகல் 12 மணிக்கு தலைமைப்பதியின் கிழக்கு வாசல் முன்பு ஊர்வலம் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.
அன்னதானம்
அவதார தின விழாவை முன்னிட்டு நெல்லை, குமரி தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் ஊர்வலத்தில் வெளிமாவட்ட பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். ஊர்வலம் வரும் வழிகளிலெல்லாம் அந்தந்த பகுதிகளை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் ஊர்வலத்தில் வருபவர்களுக்கு மோர், சர்பத்து, அன்னதானம், தயிர்சாதம் ஆகியவைகளை இலவசமாக வழங்கினர். தலைமைப்பதியில் கிழக்கு வாசல் அருகில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் காலை 6 மணி முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
ஊர்வலத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.