தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர், துணை மேயர் போட்டியின்றி தேர்வு

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி, துணை மேயராக ஜி.காமராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-03-04 21:59 GMT
தாம்பரம்,

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில் 54 வார்டுகளை தி.மு.க. கூட்டணியும், அ.தி.மு.க. கூட்டணி 9 வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக வசந்தகுமாரி கமலக்கண்ணன் தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்பட்டார். 25 வயதான வசந்தகுமாரி, பி.டெக் கெமிக்கல் என்ஜினீயர் ஆவார்.

போட்டியின்றி தேர்வு

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் வசந்தகுமாரி போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா(தாம்பரம்), இ.கருணாநிதி(பல்லாவரம்) ஆகியோர் முன்னிலையில் தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக வசந்தகுமாரி பதவி ஏற்றார்.

அவருக்கு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் மேயருக்கான உடை, செங்கோலை வழங்கி, மேயர் இருக்கையில் அமர வைத்தார்.

தரம் உயர்த்தப்படும்

பதவியேற்ற பிறகு மேயர் வசந்தகுமாரி நிருபர்களிடம் கூறும்போது, “தாம்பரம் மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்விளக்கு வசதிகள் அனைத்தும் நிச்சயமாக செய்து தரப்படும். தாம்பரம் மாநகராட்சியை சென்னைக்கு நிகராக தரம் உயர்த்தப்படும். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என்றார்.

முன்னதாக அவர், மேயராக பதவி ஏற்பதற்காக தந்தை கமலக்கண்ணனுடன் கடப்பேரியில் உள்ள வீட்டில் இருந்து திருநீர்மலை சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். மேயராக பதவி ஏற்ற பிறகு அவருக்கு அரசு சார்பில் கார் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேயரான பிறகு வசந்தகுமாரி அந்த காரிலேயே வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

துணை மேயர் ஜி.காமராஜ்

அதேபோல மதியம் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. துணை மேயர் பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஜி.காமராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சியின் முதல் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் இளங்கோவன் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஒரு சில சுயேச்சை கவுன்சிலர்களும் தேர்தலில் பங்கேற்கவில்லை.

முன்னதாக ஜி.காமராஜ் தனது இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை லட்சுமி புரத்திலிருந்து தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு தி.மு.க.வினருடன் ஊர்வலமாக வந்தார்.

மேலும் செய்திகள்