வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-04 21:10 GMT
சென்னை,

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பதிவாகி வருகிறது.

இந்தநிலையில், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென் மேற்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த சில தினங்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடற்கரையை நோக்கி நகரும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நேற்று) காலையில் அதே இடத்தில் வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 400 கி.மீ. முதல் 500 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி அடுத்து வரும் 2 அல்லது 3 தினங்களில் நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.

கன மழை

5-ந் தேதி (இன்று) கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

5-ந் தேதி, தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடை இடையே மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்