பெண் கவுன்சிலர் கடத்தல்...? பேரூராட்சி அலுவலகம் முன் குழந்தையுடன் கணவர் போராட்டம்..!
பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூறி பேரூராட்சி அலுவலகம் முன்பு குழந்தையுடன் கணவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சிமன்ற தேர்தலில் பேரூராட்சிமன்றத் தலைவராக ராஜேஸ்வரி என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவருக்கான தேர்தல் மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் கண்ணதாசன் என்பவர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில் 3-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பிரபாவதியை கடத்திச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
இதனை அறிந்த அவரது கணவர் தனது மனைவியை மீட்டுத் தர கோரி ஆரணி பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு தனது குழந்தையுடன் போராட்டம் நடத்திவருகிறார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்குவந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் ஆரணி பேரூராட்சி அலுவலகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.