உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை விரைவில் மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் மீட்க மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுப்போம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2022-03-03 18:14 GMT

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் மீட்க  மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுப்போம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்..
மருத்துவ மாணவர்கள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நடக்கும் உக்ரைனில் புதுவை மாணவ-மாணவிகள் 23 பேர் சிக்கி தவித்தனர்.  இதில் முதல் கட்டமாக வீராம்பட்டினத்தை சேர்ந்த  மாணவி ரோஜா சிவமணி பத்திரமாக மீட்கப்பட்டார். 
இந்த நிலையில் மேலும் அங்குள்ள 22 மாணவ-மாணவிகளை மீட்க புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இந்த நிலையில் குருசுக்குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த லீலாதரன் என்பவரது மகன் சேஷாதரன் (வயது 25) என்பவர் உக்ரைனில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள அவர் ஹங்கேரி பகுதியில் தங்கியுள்ளார்.
ஆறுதல்
அவரது வீட்டிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று  இரவு நேரில் சென்று மாணவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மத்திய அரசிடம் பேசி உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மீட்க முடியவில்லை
புதுவை, காரைக்கால் பகுதியை சேர்ந்த 23 மாணவ-மாணவிகள் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை படிக்க சென்றுள்ளனர். கடந்த 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா ராணுவ தாக்குதல் நடத்திய நேரத்தில் புதுவை மாணவர்கள் பாதிக்கப்பட்டு நாடு திரும்ப முடியாத சூழ்நிலை நிலவியது. மத்திய அரசின் கணக்கு படி 20 ஆயிரத்திற்கும் மேல் மாணவ-மாணவிகள், தொழில் செய்பவர்கள் உள்ளனர்.
குறிப்பாக உக்ரைன் ரஷியா இடையே போர் மூளும் அபாயம் இருந்த நேரத்தில் நமது பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுத்திருந்தால் நம் மாணவர்கள் மற்றும் அங்கு தொழில் செய்யும் இந்தியர்களை உடனடியாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்திருக்கலாம். காலதாமதம் ஏற்படுத்தி போர் மூண்ட பிறகு அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததால் நம் பிள்ளைகளை மீட்க முடியவில்லை. அவர்கள் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் பதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் வலியுறுத்தல்
மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்தாலும் உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியே செல்ல முடியவில்லை. ஹங்கேரி, போலந்து பகுதிக்கு செல்கின்றனர். அங்கிருந்து தான் அவர்கள் மீட்கப்படுகின்றனர். குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த மாணவர் சேஷாதரனுடன் 11 புதுவை மாணவர்கள் தங்கியுள்ளனர். புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை மந்திரியிடம் வலியுறுத்த உள்ளோம்.
 இந்தியாவில் உள்ள மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் மேலும் அழுத்தம் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்