டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு உறவினரிடம் தீவிர விசாரணை
புதுவை டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு போனதை தொடர்ந்து அவரது உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு போனதை தொடர்ந்து அவரது உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர் தம்பதி
புதுவை சவரிராயலு வீதியை சேர்ந்தவர் தருண்ராஜ் (வயது 35). தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி விஜயலட்சுமியும் டாக்டர் ஆவார். தருண்ராஜ் தனது தாய், தந்தை, சகோதாரியுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். அவர்கள் தங்கள் நகைகளை வீட்டில் உள்ள அலமாரியில் வைத்திருந்தனர். அதனை பூட்டி சாவியை பக்கத்திலேயே வைத்திருந்தனர். ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்றால் மட்டும் நகைகளை அணிந்து சென்று வந்துள்ளனர்.
நகைகள் மாயம்
இந்தநிலையில் வருகிற 6-ந்தேதி நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல அலமாரியை திறந்து நகைகளை சரிபார்த்துள்ளனர். அப்போது நெக்லஸ், வளையல் என 11 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து தருண்ராஜ் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
உறவினரிடம் விசாரணை
விசாரணையில் தருண்ராஜின் உறவினரான திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அடிக்கடி புதுவை வந்து அவர்களது வீட்டில் தங்கியது தெரியவந்தது. அவருக்கு நகை மற்றும் சாவி இருக்கும் இடம் தெரியும் என்பதால் அவர் திருடி இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக தருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வெங்கடேசை போலீசார் வலைவீசி தேடினார்கள். தற்போது அவர் போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.