மேயர் தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு சிபிஐஎம் சார்பில் டி.நாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, நாளை மேயர்,துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு திமுக மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 மாநகராட்சி துணை தலைவர், 2 நகராட்சி தலைவர் , 3 நகராட்சி துணை தலைவர் மற்றும் 3 பேரூராட்சி தலைவர், 6 துணை தலைவர் பதவிகளுக்கு திமுக இடம் ஒதுக்கியது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் டி.நாகராஜன் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.