நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி கேட்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி திட்டத்திற்கு தகுதியானவர்களிடம் வட்டி கேட்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-03-02 21:44 GMT
சென்னை,

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை உள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் நகை இல்லாமலும், போலி நகைகளுக்கும் கடன்கள் அள்ளி வழங்கப்பட்டன.

எனவே இந்த முறைகேடுகளால் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

முறைகேடுகளை கண்டுபிடித்து அவற்றை நீக்கிவிட்டு பின்னர் தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.

அரசு செலுத்தும் வட்டி

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டி வருமாறு:-

கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களுக்கான இறுதி பட்டியலை ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் பட்டியல் ஒட்டப்படும்.

2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

எனவே கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பட்சத்தில் ஆய்வு செய்து அவர்களுக்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்