காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கத்தியால் வெட்ட முயன்றதால் பரபரப்பு
காதலிக்க வற்புறுத்தி மாணவியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி
காதலிக்க வற்புறுத்தி மாணவியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்-2 மாணவி
புதுவை திப்புராயப்பேட்டையை சேர்ந்த 17 வயது மாணவி நகரப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவரை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மதுரைமுத்து என்பவருடைய மகன் முகேஷ் (வயது 22) ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
மேலும் அவர் அந்த மாணவியிடம் பலமுறை தன்னை காதலிக்க சொல்லி வலியுறுத்தி உள்ளார். ஆனால் மாணவி அதனை ஏற்கவில்லை.
கத்தியால் குத்த முயற்சி
இந்தநிலையில் நேற்று இரவு மாணவி செஞ்சி சாலை சந்திப்பில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முகேஷ், என்னை ஏன் காதலிக்க மாட்டாய்? உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி தலையை பிடித்து சுவற்றில் மோதி முகத்திலும், கையிலும் தாக்கினார்.
மேலும் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட முயற்சி செய்தாராம். மாணவி சத்தம்போடவே அங்கிருந்தவர்கள் திரண்டு வந்தனர். உடனே முகேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வலைவீச்சு
தாக்குதலில் காயம் அடைந்த மாணவி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசிலும் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகேசை வலைவீசி தேடி வருகிறார்.