நகை கடன்கள் தள்ளுபடி "பணத்தை முன்கூட்டியே வழங்கவில்லை" - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
நகைக் கடன் தள்ளுபடிக்கான பணத்தை தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
"கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பொத்தாம் பொதுவாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, கடன் தள்ளுபடி கேட்டு விண்ணப்பித்த கிட்டத்தட்ட 49 லட்சம் நபர்களில், வெறும் 13 லட்சம் நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி அறிவித்துவிட்டு மீதமுள்ள 36 லட்சம் நபர்கள் கடன் பெற தகுதியற்றோர் எனத் தெரிவித்தது.
கடன் தள்ளுபடி குறித்து வெளியிடப்பட்ட 2021-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதியிட்ட அரசாணையில், நகைக் கடன் தள்ளுபடிக்காக 6,000 கோடி ரூபாய் தோராயமாக செலவாகும் என்றும், 01-04-2021 முதல் மேற்படி அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள் வரை அதற்குரிய வட்டியினை அரசு ஏற்றுக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடித் தொகையினை அரசு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மேற்படி அரசாணையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில், நகைக்கடன் தள்ளுபடிக்கு முன்பாக, கூட்டுறவு சங்கங்களின் வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைக் கடன்களுக்கான தொகையை அரசு முன்கூட்டியே தராவிட்டால் சங்கங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
பொதுமக்களின் நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும், அதே சமயத்தில் அதற்கான பணத்தை சங்கங்களுக்கு அரசு முன்கூட்டியே தர வேண்டுமென்றும், அரசு நகைக் கடன் தள்ளுபடி அறிவித்த நாளிலிருந்தே வட்டி கட்டுவதை நகைக் கடன் வாங்கியோர் நிறுத்திவிட்டனர் என்றும், வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் வங்கிகள் இயங்குகின்றன என்றும், 01-04-2021 முதல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளான 01-11-2021 வரையிலான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்த அரசு அதற்கு பிறகான வட்டியைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்றும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புத் தொகை பெற்று அந்தப் பணத்தில் தான் கூட்டுறவு நிறுவனங்கள் நகைக் கடன்களை வழங்குகின்றன என்றும், நகைக் கடனுக்கான பணத்தை முன்கூட்டியே அரசு விடுவிக்காததால், கூட்டுறவு நிறுவனங்களில் வைப்புத் தொகை வைத்துள்ளவர்களுக்கான பணத்தை திருப்பி அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளம் அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையை அந்தந்த சங்கங்களுக்கு முன்கூட்டியே அரசு வழங்க வேண்டுமென்றும், நகைக் கடன் தள்ளுபடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை உள்ள வட்டி குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டுமென்றும் மேற்படி சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நகைக் கடன் தள்ளுபடி செய்ததே வெறும் 25 விழுக்காடு நபர்களுக்குத்தான். அதிலும் பல்வேறு குளறுபடிகள். நகைக்கடன் தள்ளுபடி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளம் தருவதும், வைப்புத் தொகை முதிர்ச்சி அடைந்தவுடன் அதற்கான பணத்தை வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிப்பதும் மிகவும் முக்கியம். நகைக் கடன் தள்ளுபடிக்கான பணத்தை தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நகைக் கடன் தள்ளுபடி மற்றும் இதுநாள் வரையிலான வட்டியை அந்தந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு உடனடியாக வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.