அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்..!

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியபோது உடனிருந்த 10 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-03-02 06:54 GMT
கோப்புப்படம்
சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.

சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணை முடிவடையாத நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை வருகிற மார்ச் 7 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. மார்ச் 7, 8 தேதிகளில் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியபோது உடனிருந்த 10 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்படுள்ளது.

மேலும் செய்திகள்