நான் இளமையாக இருப்பது எப்படி? மு.க.ஸ்டாலின் விளக்கம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்: நான் இளமையாக இருப்பது எப்படி? மு.க.ஸ்டாலின் விளக்கம்.

Update: 2022-03-02 00:07 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி நேற்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்த மாணவ, மாணவிகளுடன் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின், பள்ளியின் இல்லத்தலைவி நிர்மலா, முதல்வர்கள் பெர்பின், ஜெசிந்தா ரோஸ்லின் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார். இதன்பின்பு, பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பள்ளி நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் மாணவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘யார் என்னை வாழ்த்தினாலும் உங்களது வாழ்த்துக்கு நிச்சயம் அது ஈடாகாது. ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் அன்று இங்கு வருகிறபோது எனக்கு எத்தனை வயது என்பதை சொல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு எனக்கு வயது 69. இதை சொன்னால் சிலர் நம்ப மாட்டார்கள். இவ்வளவு இளமையாக இருக்கிறாரே...39 வயது தான் இருக்கும் என கூறுவார்கள். அதற்கு, நான் எனது உடல்நலத்தை, உணவு பழக்கத்தை, உடற்பயிற்சியை முறையாக செய்து வருவதுதான் காரணம். என்னதான் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இருந்தாலும் உங்களை சந்திக்கின்ற போது 5 வயது குறைந்து விடுகிறது. நீங்கள் தான் முதலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறீர்கள். அதான் எனக்கு மகிழ்ச்சி' என்றார்.

மேலும் செய்திகள்